Wednesday, June 25, 2014

மடிக்கணினியில் மல்லிகை பூந்தோட்டம்

மல்லிகை பூந்தோட்டத்தை
மடிக்கணினியில் பார்க்கிறோம்,
மனம் வரவில்லை யென்று,
மனதுக்குள் வேர்க்கிறோம்!
துல்லிய ஒளி கேட்டாலும்,
தெள்ளிய காட்சி யானாலும்,
தொட்டுப்பார்கக ஏங்கினோம்!
மெல்லிய சோகம் ஆனாலும்,
மறுமுனை அறியுமென்று
மறைத்து வைத்து தாங்கினோம்!

காய்ச்சலுல எம் கண்கள்
கண்டபடி சிவந்திருக்கும்,
காணொளியில் கேட்கும்போது,
கண் தூக்கம் இல்லையென்று
கள்ளக் காரணம் சொல்லிடுவோம்!
பரதேசம் பற்றி கேட்டால் மட்டும்,
பிரதேசம் இதை போலில்லையென
பொய்யாக புகழாரம் சூட்டுவோம்,
பிரிவு துயர் வேதனயை எங்கள்,
புறமுதுகில் ஒளித்திடுவோம்!

மதிய உணவு என்னவென்று
அதிகாலையில் கேட்டிடுவோம்,
மீன் குழம்பென்று சொல்லிவிட்டால்
ஏன் இங்கே வந்தோமென்று
எண்ணி எண்ணி ஏங்கிடுவோம்!!
முன்னின்று நடத்தவேண்டிய
மாமன் மகன் மனவிழாவை,
முகநூலில் மட்டும் பார்த்திடுவோம்!
கெட்ட செய்தி ஏதும் வந்தால்,
கிட்ட  இல்லாமல் போனோமென்று
கண்கள் மட்டும் கலங்கிடுவோம்!

சிந்திய ரத்‌தம் உறைந்து
சொந்த தேசம் திரும்பிடுவோம்,
வந்து சேர்த்ததும் ஒருக்கூட்டம்
பந்தா பண்ணுகிறான் பாரென்று,
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும்!
பந்த பாசத்த அடகுவச்சி, எங்கள்
பையில கொஞ்சம் பணமிருக்கும்,
நொந்து போன எங்க நெஞ்சுக்குள்ள,
நூறுகோடி ரனம் இருக்கும்!
கணக்குப் போட்டு பார்த்தா,
நாங்கள் இழந்தது இமயமென்று,
இளம்பிள்ளைக்கு கூட புரியும்!

-Siva

No comments:

Post a Comment