Sunday, May 4, 2014

கிராமத்து தேவதை

தாயம் விளையாடும் கண்ணாலே
என்னை காயம் செய்து போனாலே!
சாயம் ஏதும் இல்லாம,கன்னம்
சிவந்து மாயம் செய்தாலே!

தலைக்கனம் அதிகம் என்று
தலை சூடிய பூக்கள் எண்ணுமே,
பாரம் குறைக்க எண்ணி,இவள்
பாதம் பட்டிங்கு அழியுமே!
பின்னழகுடன் சேர்ந்து இவள்
பின்னலிட்ட ஜடை ஆட்டினாலே,
மின்னலொளியும் கூட,வான
சன்னல் திறந்திங்கு வருமே!

குனிந்த தலை நிமிராம,இவ
நிலம் பார்த்து நடந்தாலே,
முகம் பார்க்க எண்ணி,முழு
நிலவும் வருமே நீரின்மேல!
பட்டு புடவை கட்டி இவள்
எட்டு எடுத்து வைத்தாலே,
மெட்டெடுத்து பாடிவரும்,அந்த
மேக கூட்டம் பின்னாலே!

இடையை தழுவும் மேகலையா
என் கைகள் இன்னும் ஆகலையா?
வண்ண மயிலிறகு மேனி பட்டு
இந்த பெண்ணுடம்பு நோகலையா?
அழகென்ற சொல் இவளழகறிந்து
அகராதி விட்டின்னும் போகலையா?
பெயரளவு பேரழகிகள் எல்லாம்
பொறாமை தீயிலின்னும் வேகலையா?
-Siva