Sunday, August 17, 2014

மகளே மகளே

தனக்கு கொடுத்த மிட்டாயை
தாராள மனம் கொண்டு,
"ஆ" திற என்று சொல்லி,
அன்பாய் வாயில் ஊட்டுவாள்! 

குளிரும் தேகம் என்றெண்ணி 
குளித்து நான் முடித்ததும் ,
குடு,குடுவென ஓடி வந்து, 
குட்டி துண்டை முன்னே நீட்டுவாள் ! 

பேச வாய் திறக்கும் முன்னே
பாசம் பேச நினைக்கிறதே, 
பிஞ்சு தளிர் சிந்திய துளி நீர், 
நெஞ்சம் முழுக்க நனைகிறதே!

-Siva

மழை

மேகத்தில் பிறந்த பிள்ளையாய்
மேல தாள ஒலியுடன், 
மின்னைல் ரேகை கையை மூடி, 
மேனி ஆடை இல்லாமல், 
மேதினியில் தவழ வந்தாள் !

மெத்தை வீட்டின் கதவுகள் 
மேற்கு வாசலில் மூடியிருக்க, 
மேற்கூரை ஓட்டை வழி, 
மெல்ல மெல்ல இறங்கி
மேசை மேலுள்ள தட்டில்,
மெல்லிசை ஒன்றை பாடினாள் !
மெழுகிய தரையில் சிதறி 
மெழுகாய் கறைந்து ஓடினாள் !

மேடு பல்லம் மேல் விழுந்தால்
மேலும் அடிவிழும் என்றெண்ணி,
மண்ணெனும் வளர்ப்பு தாய்
மெத்தை விரித்த புல்லின் பாயில்,
மடியில் வைத்து ஏந்தினாள்! 
முத்த சேற்றை குழைத்துவைத்து
முகம் முழுக்க பூசினாள்!

மலர் இதழில் உறங்கி , 
மலை அருவியில் இறங்கி,
மாலை பொழுதில் கிறங்கி, 
மழலை மொழியில் பேசி ,
மழைத்துளி மனம் வருந்தி மனிதனிடம் சொன்னதென்ன?

முன்ஜென்மம் ஒன்றில் , 
மும்மாரி் உன் முகம் பார்க்க 
முற்றத்தில் வந்து காத்திருப்பேன் ,
மர நிழலில் இளைப்பாறி
மழலை கூட்டத்தில் விளையாடி ,
மறுநாள் மண்ணில் மறைந்திடுவேன்!

மீண்டும் அந்த காலத்தை
மீட்டுவர நினைத்தாலும்,
முடியாமல் தானே போகும்!
மாசு காற்றில் முகம் மூடி,
மடியாமல் என்னுயிர் நோகும்!
முறிந்து போன கிளைகளும்
மூச்சு முட்ட ஏக்கத்திலே ,
மூளையில் முடங்கி சாகும்!

மூவாயிரம் ஆண்டுகள் ,
முன்தோன்றிய தமிழினத்தை
முப்பதாண்டில் ஒழித்த இனம்,
மழையினம் அழிக்க பார்த்தால்
முத்தாய் பொழிந்த ஆலங்கட்டியும் ,
முப்பொழுதும் அமிலமாகாதோ?
முகவரி தேடி அலைவதே, நம்
முழுநேர வேலை என்றாகாதோ !

-Siva

Wednesday, August 6, 2014

எங்கே இருக்கிறாய் இறைவா?

எங்கே இருக்கிறாய் இறைவா?
ஏழை கண்களுக்கு மறைவா!
வறுமை என்னும் வீட்டுக்குள்ளே,
வாடகை இன்றி வசிக்கிறோமே!
கஞ்சிக்கும் கூட வழியில்லாமல்,
காற்றை தினமும் புசிக்கிறோமே!

பணமெனும் பழைய விருந்தாளிய,
பார்த்து ரொம்ப நாளாச்சே!
பாக்கு வெத்தல வச்சு பார்த்தும்,
பக்கம் வர மறுக்கிறதே!
வட்டி கடன் மட்டும் தான்,எங்கள்
வாழ்க்கை முழுக்க வருகிறதே!

கனவை சுமந்த எங்கள் பிள்ளை,
கற்களை தலையில் சுமக்கிறதே!
பள்ளி கூடம் போகும் கால்கள்,
பாலைவனம் நோக்கி போகிறதே!
கள்ளி செடியின் படுக்கை மேலே,
காலை நீட்டி உறங்குகிறதே!

எங்கே இருக்கிறாய் இறைவா?
உன்னருளில் என்ன குறைவா?
புன்னகை எங்கள் இதழோரம்,
பூட்டி கிடக்கிறது திறவா!
ஏழை கண்ணீர் துடைக்க விரைவா,
மறுமுறை மண்ணிலே பிறவா!!

-Siva

Sunday, August 3, 2014

குட்டி கவிதை -2(நட்பு)

முன் பின் தெரியாத முகத்திற்கு,
அன்பின் அடையாளம் கொடுத்து,
நம் பின் நாளும் வரும் சொந்தமே
நட்பு!!
-Siva