Saturday, July 26, 2014

குட்டி கவிதை -1

செடியின் மடியில் பூத்த மல்லிகை, 
நொடியில் நாரிலே மடிவதெல்லாம் 
நங்கை கூந்தலில் புதைய தான்! 

-Siva 

Thursday, July 24, 2014

யார் இந்த தீவிரவாதி ?

துப்பாக்கி உரிமம் வாங்கவே துப்பில்லாதவன்,
பல அப்பாவி உயிர்களை வாங்குவான்,
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்,
கருணை என்ற பக்கத்தை கிழித்து
காகித கப்பல் செய்து விளையாடி ,
கடைசியில் குப்பையில் வீசுவான்!

பனைய கைதிகளை பணத்துக்காக
பினக்குவியல்களை சினத்துக்காக ,
தினமொரு திருவிளையாடல் ஆடி
தீராத விளையாட்டுப் பிள்ளையாவான்!
ஜெயிலின் கம்பிகளில் அடைத்து வைத்தால்
ரயிலின் பெட்டிகளை வெடிக்க வைத்து ,
வெயிலின் வீதியில் உலா வருவான்!

அமைதி சீட்டை காலில் சுமந்து,
வானில் பறக்கும் வெண்புறாவையும்
வேட்டையாடி வீழ்த்திடுவான் !
சமாதி கட்ட செலவில்லாமல்,நம்
சடலத்தை எங்கோ தூக்கிஏறிந்து,
நிம்மதி வாழ்வில் தேடிடுவான் !

யார் தான் இந்த தீவிரவாதி ,
நாளும் அவனே தலைப்பு செய்தி,
நடக்கும் கொடுமையில் பாதி,
அழிந்து போன கொடிய மிருகத்தில்
அழியாமல் இருக்கும் மிச்சம் மீதி!

-Siva

இளம்பிள்ளை வாதம் (argument)

சுதந்திரம் எனது பேச்சுரிமைனு
சொன்னாங்க சுதேசி ஆளுங்க ,
பேச்சு வந்ததால எங்க சுதந்திரம்
போச்சுனு சொல்லுறோம்
ஏன்னு கேள்வி கேளுங்க!
இடுப்பை விட்டு இறங்கி வந்து 
இரண்டு வருடம் கூட ஆகல,
படிப்பை எங்க தலையில கட்டி,நீங்க
படுத்தும் பாடோ தாங்கல!

அரிசியில கை பிடிச்சி நீங்க
ஆனா ஆவன்னா எழுதினீங்க,
அரிஸ்‌டாடல் தத்துவத்தை
அதுக்குள்ள எனக்கேன் சொல்ரீங்க?
பாடி களிக்கும் இந்த வாயால
வாய்ப்பாடு ஏன் கேட்கிறீங்க ?
ஓடி விளையாடும் வயசுல
ஒட்டக பை சுமை எதுக்குங்க?

பள்ளி விடுமுறை நாட்களிலே
துள்ளி ஆட நினைத்தாலும்,
சொல்லி கொடுக்கிறேன் வாவென்று
கொள்ளிய கனவுல வைப்பீங்க!
தள்ளி சென்று போக்கு காட்டினால்
கிள்ளி விட்டு அழ வைப்பீங்க!
சல்லி காசு பெறாத மதிப்பெண்ணிற்கு
ஜல்லிக்கட்டு காளையா மல்லுகட்டுவீங்க!

புழுதி மண்ணில் புரண்டு ,சட்டை
எழுதிய புது கவிதையை
எழுத்து கூட்டி வாசிக்குமுன்,
புத்தகத்தை திறக்க சொல்லி,
புழுவை போல் துடிக்க வைப்பீங்க!
கோடைக்காலம் வந்தால்
கொண்டாட்டம் என பார்த்தால்,
கோச்சிங் வகுப்புக்கு அனுப்பி
கொத்தடிமையா மாத்துவீங்க !

பட்ட படிப்பை முடிக்க
பல காலம் மீதம் இருக்கு,
பட்டம் விடும் ஆசைதான்
பகல் கனவாய் போனதெனக்கு!
அலையாடும் அந்த கடலைப்போல
விளையாடி மகிழ இந்த உடலிருக்கு,
விலைபேசி நீங்கள் விற்ற பின்னும்
விடியலுக்காக இன்னும் காத்திருக்கு!
-Siva.

Saturday, July 5, 2014

வெடிகுண்டு

பாறை உடைக்க பிறந்தாய், 
படி படியா ஊர்ந்துவந்து ,இன்று 
ஊரை அழித்து விட்டாய் ! 
தீபாவளி திருநாளில் உன்னை 
தெருவெல்லாம் சிதற விட்டோம்,
தீவிரவாதி மூலமா நீ ,
திரும்ப வந்து பழிதீர்த்தாய் !
துப்பாக்கி குழலில் புகுந்து,பல
அப்பாவிகளின் தூக்கம் கெடுத்தாய்!

எவனோ செய்த பிழைக்கெல்லாம்
எங்களிடம் கோவமாய் பேசினாய்!
பள்ளி என்று கூட பார்க்காமல்,
துள்ளி விளையாடும் குழந்தையை
தூரத்தில் தள்ளி வீசினாய்!
அமைதி தேடி வருவது போல் நடித்து
ஆலயத்திலும் குருதியை பூசினாய்!
நாளும் புகழ் பெற வேண்டி,
நாளிதழில் முதல்பக்கம் ஆனாய் !

அளவில் சிறிதாக இருந்தாலும் ,
அழிவை மட்டுமே காட்டினாய்!
உன் தலையில் கொள்ளி வைத்தால்,
ஊரையே உலையில் ஏற்றினாய்!
இலை மறை காயாக இருந்து,பல
தலைமுறையை தீர்த்து கட்டினாய்!
விலைகொடுக்க முடியா உயிரைக்கூட,
விற்று தீர்த்து வீடு திரும்பினாய் !

பணத்தை தேடி ஓடிய எங்களை
பிணத்தை தேடி ஓட வைத்தாய் ,
இனபடுகொலை என்ற சொல்லில்
இலக்கியம் ஒன்றை எழுதினாய்,
முற்று புள்ளி வைக்க மறந்து
தொற்று வியாதி போல் தொடர்ந்தாய்!

அன்பெனும் தடுப்பூசி போட்டு உன்னை,
அகிலத்தை விட்டு ஓட செய்வோம்!
மறுபடி எங்களை தேடி வந்தால் ,
மண்ணுக்குள் புதைத்து மூடி வைப்போம்! 


-Siva

ஞாபகம்

ஏவுகனையை கட்டி கொண்டு,
ஏன் இந்த பேருந்து செல்லாதோ?
தீவுகளை தாண்டியும் , குட்டி
தேவதையின் ஞாபகம் கொள்ளாதோ ! 
போக்குவரத்து நெரிசலெல்லாம், பெரும் 
போர்க்களம் போல் தோன்றாதோ ! 
சிலப்பொழுது எரியும் சிவப்பு விளக்கு ,
சிந்தும் உதிரம் போலாகாதோ!
மைல் காட்டும் தூரம் தான்,உண்மையில்
உடல் தேடும் உயிரின் இடைவெளியோ !

காலையில் அவளை
கைகளில் ஏந்தினேன்,
கால தாமதம் ஆனதென்று
சட்டென்று இறக்கி சென்றேன்
சத்தம் போட்டு இறுக்கி பிடித்து ,
சட்டயோராம் அவள் கசக்கியது
சற்றும் மாறாமல் இன்னுமிருக்கு!
கை அசைத்து விடைபெறாமால்,
கண்ணீரோடு விட்டு சென்ற,
குற்ற உணர்ச்சி மட்டும் தான்,என்
நெஞ்சம் முழுக்க நெறஞ்சிருக்கு!

அலுவலக கணினிகுள்ளும் ,
பிள்ளை நிலவை பதுக்கி வைத்தேன்,
அடிக்கடி அதனை திறந்து பார்த்து
ஆறுதல் அடைவது போல் நடித்தேன்!
உணவு இடைவெளியின் போதும் ,
உள்ளங்கை அலைபேசியில்,அவளை
கனவாய் பார்த்து கலங்கினேன்!

களைத்து திரும்பிய இந்த உடம்பு,
கதவோராம் ஏன் காத்திருக்கு?
கழுத்தை பிடித்து கொண்டு,
அப்பா அப்பாவென்று அவள்
அலறும் சத்தம் கேட்பதற்க்கு!
இரண்டு மணி நேர இந்த பயணம்
இரவோடு இன்று முடிந்தாலும்,
அப்பா மகள் என்ற உறவோடு,
ஆயுள் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும்
செல்லரித்து போனாலும் என் நா,
செல்லமகளுக்காக செந்தமிழை
பாடிக்கொண்டிருக்கும்!

-Siva