Saturday, September 6, 2014

காயிலாங்கடை வியாபாரி

சுற்றும் விளக்கை தலையில் சூடி,
குற்றுயிரை மடியில் சுமந்து ,
பிள்ளை போல் அலறிக் கொண்டு,
வெள்ளை தேவதை ஓடினாள் !

அருகே இருக்கும் ஆலயம் தேடி,
ஆண்டவனை பார்க்க காத்திருந்து ,
ஆறுதலின்றி வெளியே வாடினாள் !

காணிக்கை செலுத்த வழியில்லாமல்,
கண்ணீர் தவிர மொழியில்லாமல்,
காலனின் கைகளில் உயிரை விற்று,
காயத்தை மட்டும் நெஞ்சில் சுமந்து ,
கதறியழுது வீடு திரும்பினாள்!

அவள் கடவுளாய் பார்த்தவன் கடவுளில்லை ,
கைக்கொரு விலை, காலுக்கொரு விலைபேசும்
காயிலாங்கடை வியாபாரி!
அவள் கூட்டி சென்ற இடம் கோவிலில்லை,
மருத்து போன இதயங்கள் வசிக்கும்
மருத்துவ மனை!!
-Siva

எந்த நிறத்திலே அழகிருக்கு?


கருமை நிறமென்று குயில்,
கூவ கூச்சமுற்றதுண்டா? 

நீல நிறமென்று  கடல்,
நித்தம் வருந்தியதுண்டா? 

நிறமில்லையே என காற்று, 
சித்தம் கலங்கியதுண்டா?

உடலில் ஓடும் செங்குருதி,தன் 
நிறமாறினால் சங்குருதி! 

எந்த நிறத்திலே அழகிருக்கு? 
நிறம் மாற நினைப்பதும் எதற்கு?

தன்நிறத்தில் தன்னிறைவுற்றால்,
எல்லா நிறத்திலும் அழகிருக்கு! 

-Siva

மீன் -குட்டி கவிதை

நீந்தாமல் மேலே வந்த மீனும், 
உழைக்காமல் மேலே வந்த ஆணும் 
எப்போதும் ஓன்று தான்!!!

-Siva

வண்ணமாக பிறந்தால்,
கண்ணாடிப் பெட்டிக்குள் 
திண்ணமாக பிறந்தால்,
மண் குழம்பு சட்டிக்குள்!
கண்ணீரோடு மீன்!!!
-Siva