Tuesday, March 25, 2014

தேரிக்காட்டு தேசம்

ஏலே ஏலே எங்கல்லே,
எள்ளுவிளை தேரிக்குள்ள
ஏறி போவோம் வாங்கலே!
ஒட முள்ளு குத்தும்,ஓரமா ஒதுங்கி போங்கலே!

பன ஒல வீடுக எங்கல்லே ?
பங்கலாவா போச்சு பாருங்கலே!
பாம்படம்  போட்ட  பாட்டி  எங்கல்லே?
பாக்கிடிக்கும் அவ சத்தம் கேக்கல ?
பைனி விக்கும் பயவுள்ளைங்க எங்கல்லே?
தேனி பக்கம் பொழபத்து போய்ட்டாங்கலே!
திருவிழா ஆளுக எங்கல்லே ,
தேடியும் ஒருவயலையும் காங்கல!
கோயில் கொடயெல்லாம்,
கொட சாஞ்சி நிக்குதில்லே!

களவாண்டு தின்ன கொள்ளாங் கொட்டைய,
காலுக்கடியில பாக்கையில,
பல்லாண்டு  பிரிஞ்ச வலி நோவுதிலே !
கருப்பட்டி காய்ச்சி காத்துல வரும் வாசம்,
காணாமபோய் பத்தாண்டு ஆகுதிலே!

பெப்சி கோலா குடுக்கும் அண்ணாச்சி ,
காளிமார்க் கலரெல்லாம் என்னாச்சி?
உலகமயம் என்ற பேர சொல்லி,
எங்க ஊரும் இன்று மாயமாச்சி!

-Siva

Monday, March 24, 2014

I.T அவலம்

வட்ட நிலவிலும் சிறு கரை இருக்கு,உங்க
சட்டையில ஒரு கரை இருக்கா?
எட்டி நிக்கும் வானுக்கும் வேர்த்துக்கொட்டும்,
இந்த I.T ஆளுக்கு வேர்த்திடுமா ?
எத்தனை  எத்தனை கேள்வியடா ,
எல்லாத்துக்கும் பதிலுன்டு கேளுங்கடா!

பத்தும் செய்யும் பணம்னு சொன்னீங்க,
E.M.l அடைக்க அதனால் முடியலையே?
அஞ்சிநாள் தான் வேலைனு பொறாமைபட்டீங்க,
கெஞ்சினாலும் ஊருக்கு விடுப்பு கிடைக்கலையே?
அழகிய அலைபேசிய எங்க கையில பாத்தீங்க,
அழுகின்ற எங்கள் குரல அதில  கேட்டீங்களா?

நாகரீக உடைபோட்டு, பூனை
நடைபோடும் கணினி பெண்ணை ,
நையாண்டி பண்ணி சிரிச்சீங்க!
பெத்த புள்ளைய பத்து நாளுக்குள்ள,
பிரஞ்சு  வாடும் அவள் விழிகள,
ஒத்த நொடி பாத்தீங்களா?

உறவெல்லாம் எங்களுக்கு கனவாச்சி,
இரவெல்லாம் எங்களுக்கு பகலாச்சி,
ஈட்டிய செல்வமெல்லாம் E.M.lக் என்றாச்சி,
எட்டு வருஷ எங்க நல்ல காலம் ,
ஒம்போது பதினொன்னோட(9/11) போயாச்சி !

-Siva

Friday, March 21, 2014

அகநானூற்றி ஒன்று

நீரில் நனைத்த பஞ்சு போல
கண்ணீரில் நனைத்து
நெஞ்சம் கணப்பதென்ன!
வேரில் விட்ட வெந்நீராய்  இந்த
வஞ்சிக்கொடி வாடியதென்ன!
தேகம் தோன்றியது தேமலென்று
தோழிக்குறைத்தேன்,பொய்யுடைத்து
பாழும் பசலை படர்ந்ததென்ன!
கிழக்கே அவன் சென்றானோ,உயிர்
வடக்கிருந்து வதைப்பதென்ன!
புன்னகை  பூவை இதழ் தொடா,
பொன்னகை பட்டுடல் தொடா,
பருக்கை சோறு  பவளவாய் புகா,
உள்ளெலும்பு உலகம் நோக்க,
துரும்பென இளைத்து துடித்தேன்,
காந்தம் போல் கவர வாரானோ !
வானை தழுவும் முகிலை போல்
வீனாக என்னவா போகுமோ!
மானை தோய்த் தம்பை போல்
மனம் மதியிழந்து சாகுமோ !

-Siva

Tuesday, March 18, 2014

தேர்தல்

அஞ்சு வருடத்தில் பூக்கும்
அவசர குருஞ்சி பூவாய்,
அனைத்து மாநிலத்திலும்
தேர்தல் பூ பூத்தாச்சு!

கரை வேட்டி கட்டி மகன்
சக்கர பேச்சு பேசிகிட்டு,
அக்கரை கேட்டு வருகிறான்
வக்கிர புத்திய வச்சிகிட்டு!

வாய்மை வார்த்தைய நம்பிவிட்டு,
கை-மை கொஞ்சம் பூசிக்கிட்டு ,
தலைமை ஏற தேர்ந்தெடுப்பான் ,
வறுமை வாழ்க்கை வாழ்ந்துகிட்டு !

வந்தால் வடியும் வெள்ளமாய் ,
வராமல் மடியும் வறட்சியாய்,
நீர் வந்தாலும் வராவிட்டாலும்
கண்ணீர் என்றும் கரைவதில்ல !

கையூட்ட வாங்கிக்கிட்டு,
பொய்  ஓட்ட போட்டுவிட்டு,
கைமேல் வந்த வெற்றியெல்லாம் ,
மெய் தேர்தல் வெற்றியில்ல!

-Siva 

Monday, March 17, 2014

பந்தைய குதிரை

எந்தையும் தாயும் இருக்கி பிடித்து
பந்தையம் கட்டிய குதிரைகளாய்,
பந்த பாசம் பக்கம் திரும்பாமல்
பகட்டு கடிவாளம் கட்டிகிட்டு ,
லயித்து விளையாடும் நேரத்தில்,
லட்சியம் என்ற லாடம் அடித்து ,
பதுக்கி வைத்த திறமைகள் மறந்து
ஒதுக்கி வைத்த ஒரு கோட்டின்  மேல் ,
ஓடி கொண்டே இருக்கிறோம் நுரைதல்ல  !
எல்லை கோடு தாண்டி போயும்,
எங்கள் ஓட்டம் ஓயவில்ல  !
உலக்கையில கனவை குத்தி ,உரலுல
உமியெடுக்கும் பெற்றோர என்ன சொல்ல !

-Siva

Thursday, March 13, 2014

கன்னி வடிவம்

கன்னி வடிவமா கவிதைய
கண்டாயடா கவிஞ்ஞா ,
எண்ணி நானும் பாக்குறேன்
ஏன்னு கேள்வி கேக்குறேன் !

தலையில் சூடிய பூக்கள்
தலைப்பு என்றானதோ?
துருத்தி நிற்கும் புருவங்கள்
விருத்தம் என்றானதோ?
ஆங்காங்கே வரும் ஆச்சரியக்குறி,
மூச்சிறைக்கும் நாசியோ?
எதுகை மோனை என்பதெல்லாம் ,
முதுகை போன்றதோ?
பெண்பாதம் நடந்த ஈரடி,
வெண்பா என்றானதோ?
சீரடியில் அசையும் இடை தான்
சீர்,அடி,அசை என்றானதோ?

கன்னிதான் கவிதை என்று
கண்ணி வைத்து காத்திருந்தா ,
கண்தொடாமல் என்னை வஞ்சிப்பா-லோ!
கைய்யுள் படர்ந்த ரேகைப்போல,அனைத்து
செய்யுளில் அடக்கம் இந்த பெண்பாலோ!

-சிவா

Tuesday, March 11, 2014

acoustics அழகி

மோனோ இதயத்தை மோதிய
மோனலிசா யாரோ?
ஸ்டீரீயோ விழிகளில் நெஞ்சை
சிதைத்தவள் எவளோ ?
டால்பீ ஒளியில் செவியை
தாலாட்டியவள் எவளோ ?
தலைமேல் வட்டமிடும்
அட்மோஸ் பட்டாம்பூச்சி எவளோ?
ஆரோ 3டியில் என்னை திருடிய
அழகி தான் யாரோ ?
ஃபோர்கே (4k) காட்சிபோல்
மேற்கே  தெரிவாளோ ?
எக்கோ மொழியில்
என் காதல் சொல்வாளோ ?
-Siva

Monday, March 10, 2014

தந்தையின் சத்தியம்

இரண்டடி குறளே, இறைவனின் அருளே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே!
புள்வெளி சுமந்த பனித்துளி  மேல,
சத்தியம் சத்தியம் இது சத்தியமே!
வானின் மழை போல,
பட்டின் இழையை போல
என் சத்தியம் புனிதமானது!

தாலாட்டும் போது உந்தன்
தாய்போல் ஆவேன்!
காலாட்டும் போது உந்தன்
கொலுசொலி ஆவேன்!
பிரகதி இல்லை என்றால்
பிற கதி இல்லை என்பேன்!
உன் மொழியை செம்மொழியா
செய்திட சொல்வேன்!
உன் வழி மண்ணெல்லாம்
மலராகிட செய்வேன்!
மழை ஏந்தும் நிலமாக உன்னை
மடியில் தங்குவேன்!

விரும்பி நீ விளையாடும் நேரம்
வேறெதையும் விரையேன்!
செல்ல குறும்பு செய்யும் போது
இரும்புக்கரம் நீட்டேன்!
கலை யாவையும் உணர்ந்து நீ
கற்றிட செய்வேன்!
தலை தூக்கும், சிறு துயரையும்
தணிக்கை செய்வேன்!
அரும்பும் வயதில்  நீ
விரும்பும் தோழனாவேன்!

உன் உள்ளம் வேறொருவருக் காயினும்
உள்ளளவும் பகைக்கேன்!
திருமணம் எனும் சொல்லை
திருவிழாவாக திருத்துவேன்!
பேருகலாம் பத்திலும் உன்னை
பெற்றவள்  போலாவேன்!
அள்ளி தீரா ஆழியை போல்
அன்பு அலையாடுவேன்!
ஓடி ஓயா நாழிகை போல்
உனக்காகவே உழைப்பேன் !

-Siva

Wednesday, March 5, 2014

பெத்தவங்க பேசுறாங்க ..

வளர்ந்த மண்ணையும் 
வேராக ஒரு மரம் பிடிச்சிருக்க,
வளர்த்த எங்கள 
வேறாக ஏன் நீ பாக்குற?

மத்தவங்களுக்கு விருந்து வச்சி மன
மகிழ்ச்சி கொள்ற,உன்
பெத்தவங்கள பட்டினி போட்டு 
உசிரோட ஏன் கொல்ற?
பூச்செடியை கூட நட்டு வைக்க , 
பணத்த தண்ணியா செலவழிப்ப!
நோய்-நொடினு நாங்க வந்தா,
ஒரு பிணத்தை போல அளைகழிப்ப !

வீணா செலவழிச்சி ,விளையாட்டு பள்ளியில
உம் புள்ளைங்கள சேத்துடிவ !
தானா கேட்டுப்பாத்தும்,தரிசிக்க விடமாட்ட,
எங்க பேரன் பேத்திய !
பழம் பொருளயெல்லாம் ,ஆன்டீக்னு சொல்லி ,
அலமாரியில் அடுக்கி வைப்ப !இந்த
கிழம் பொருளை,கிட்டத்துல சேக்காம 
ஆசிரமத்துல ஒதுக்கி வைப்ப !

உருவிலே பழுத்ததும், 
கருவில் பிறக்கா பிள்ளை போல ,
கண்ணுக்குள் வச்சு நீ 
காப்பாத்துவேனு நெனச்சா,
தெருவிலே நீ விட்டபோது, தெரிஞ்சிதே
அனாதை வார்த்தைக்கு அர்த்தம் ,
அகராதி ஏதும் இல்லாம !

உதிரம் குடுத்து ஊட்டி விட்டோம் ,இந்த
உலகத்தை விட்டு போன பின்னே ,
சதுர வடிவ போட்டாவ ,
மாலை போட்டு மாட்டி வைப்ப !
சந்தோஷமா உன் கூட இருப்போம்,
உன் வீட்டு சுவத்துல!
-Siva


Sunday, March 2, 2014

கால் முளைத்த துக்கம்!

பன்னிரெண்ட இரு முள்ளு தொட்டுச்சு, என்
கண்ணிரெண்ட தூக்கம் இன்னும் தொடலயோ!
தீண்டாமை குற்றமென்று, அந்த
தூக்கத்திற்கு தெரியலயோ?

திரை விலகிய தென்றல் அது
தேகத்தை தீண்டியும்,கண்ணில்
நித்திரை என்பது இல்லயோ?
இசை குயிலின் இன்பராகம் அது
செவியினை வருடியும்,விழி
சிறு துயில் கொள்ளலையோ!

நீயில்லாம நான் இருந்துக்குவேனு
நாயகன் போல நடிச்ச மனசு ,
நய்யான்டி பண்ணி இப்போ சிரிக்கிறதோ!
பொட்டியில பூட்டி வச்சி எடுத்து நீ போனது,
துணியோடு என் தூக்கத்தையுமோ!

பக்கதுல உன்னதேடி, பஞ்சுமெத்த உள்ளுக்குள்ள,
பதுங்கிருந்த பொம்மை ஒன்னு,
பொரண்டு நானும் படுக்கையில,
பொறந்த கொழந்த போல,
பொத்துக்கிட்டு அழுகிறதே!

ஒத்த நொடி தாங்காது,
ஒடனே நீயும் வரும்வர,என்
கண்ணு ரெண்டும் தூங்காதது,
கண்ணே என்ன நீ மூடும்வர!

-Siva