Monday, March 10, 2014

தந்தையின் சத்தியம்

இரண்டடி குறளே, இறைவனின் அருளே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே!
புள்வெளி சுமந்த பனித்துளி  மேல,
சத்தியம் சத்தியம் இது சத்தியமே!
வானின் மழை போல,
பட்டின் இழையை போல
என் சத்தியம் புனிதமானது!

தாலாட்டும் போது உந்தன்
தாய்போல் ஆவேன்!
காலாட்டும் போது உந்தன்
கொலுசொலி ஆவேன்!
பிரகதி இல்லை என்றால்
பிற கதி இல்லை என்பேன்!
உன் மொழியை செம்மொழியா
செய்திட சொல்வேன்!
உன் வழி மண்ணெல்லாம்
மலராகிட செய்வேன்!
மழை ஏந்தும் நிலமாக உன்னை
மடியில் தங்குவேன்!

விரும்பி நீ விளையாடும் நேரம்
வேறெதையும் விரையேன்!
செல்ல குறும்பு செய்யும் போது
இரும்புக்கரம் நீட்டேன்!
கலை யாவையும் உணர்ந்து நீ
கற்றிட செய்வேன்!
தலை தூக்கும், சிறு துயரையும்
தணிக்கை செய்வேன்!
அரும்பும் வயதில்  நீ
விரும்பும் தோழனாவேன்!

உன் உள்ளம் வேறொருவருக் காயினும்
உள்ளளவும் பகைக்கேன்!
திருமணம் எனும் சொல்லை
திருவிழாவாக திருத்துவேன்!
பேருகலாம் பத்திலும் உன்னை
பெற்றவள்  போலாவேன்!
அள்ளி தீரா ஆழியை போல்
அன்பு அலையாடுவேன்!
ஓடி ஓயா நாழிகை போல்
உனக்காகவே உழைப்பேன் !

-Siva

No comments:

Post a Comment