Thursday, July 24, 2014

இளம்பிள்ளை வாதம் (argument)

சுதந்திரம் எனது பேச்சுரிமைனு
சொன்னாங்க சுதேசி ஆளுங்க ,
பேச்சு வந்ததால எங்க சுதந்திரம்
போச்சுனு சொல்லுறோம்
ஏன்னு கேள்வி கேளுங்க!
இடுப்பை விட்டு இறங்கி வந்து 
இரண்டு வருடம் கூட ஆகல,
படிப்பை எங்க தலையில கட்டி,நீங்க
படுத்தும் பாடோ தாங்கல!

அரிசியில கை பிடிச்சி நீங்க
ஆனா ஆவன்னா எழுதினீங்க,
அரிஸ்‌டாடல் தத்துவத்தை
அதுக்குள்ள எனக்கேன் சொல்ரீங்க?
பாடி களிக்கும் இந்த வாயால
வாய்ப்பாடு ஏன் கேட்கிறீங்க ?
ஓடி விளையாடும் வயசுல
ஒட்டக பை சுமை எதுக்குங்க?

பள்ளி விடுமுறை நாட்களிலே
துள்ளி ஆட நினைத்தாலும்,
சொல்லி கொடுக்கிறேன் வாவென்று
கொள்ளிய கனவுல வைப்பீங்க!
தள்ளி சென்று போக்கு காட்டினால்
கிள்ளி விட்டு அழ வைப்பீங்க!
சல்லி காசு பெறாத மதிப்பெண்ணிற்கு
ஜல்லிக்கட்டு காளையா மல்லுகட்டுவீங்க!

புழுதி மண்ணில் புரண்டு ,சட்டை
எழுதிய புது கவிதையை
எழுத்து கூட்டி வாசிக்குமுன்,
புத்தகத்தை திறக்க சொல்லி,
புழுவை போல் துடிக்க வைப்பீங்க!
கோடைக்காலம் வந்தால்
கொண்டாட்டம் என பார்த்தால்,
கோச்சிங் வகுப்புக்கு அனுப்பி
கொத்தடிமையா மாத்துவீங்க !

பட்ட படிப்பை முடிக்க
பல காலம் மீதம் இருக்கு,
பட்டம் விடும் ஆசைதான்
பகல் கனவாய் போனதெனக்கு!
அலையாடும் அந்த கடலைப்போல
விளையாடி மகிழ இந்த உடலிருக்கு,
விலைபேசி நீங்கள் விற்ற பின்னும்
விடியலுக்காக இன்னும் காத்திருக்கு!
-Siva.

No comments:

Post a Comment