Saturday, July 5, 2014

ஞாபகம்

ஏவுகனையை கட்டி கொண்டு,
ஏன் இந்த பேருந்து செல்லாதோ?
தீவுகளை தாண்டியும் , குட்டி
தேவதையின் ஞாபகம் கொள்ளாதோ ! 
போக்குவரத்து நெரிசலெல்லாம், பெரும் 
போர்க்களம் போல் தோன்றாதோ ! 
சிலப்பொழுது எரியும் சிவப்பு விளக்கு ,
சிந்தும் உதிரம் போலாகாதோ!
மைல் காட்டும் தூரம் தான்,உண்மையில்
உடல் தேடும் உயிரின் இடைவெளியோ !

காலையில் அவளை
கைகளில் ஏந்தினேன்,
கால தாமதம் ஆனதென்று
சட்டென்று இறக்கி சென்றேன்
சத்தம் போட்டு இறுக்கி பிடித்து ,
சட்டயோராம் அவள் கசக்கியது
சற்றும் மாறாமல் இன்னுமிருக்கு!
கை அசைத்து விடைபெறாமால்,
கண்ணீரோடு விட்டு சென்ற,
குற்ற உணர்ச்சி மட்டும் தான்,என்
நெஞ்சம் முழுக்க நெறஞ்சிருக்கு!

அலுவலக கணினிகுள்ளும் ,
பிள்ளை நிலவை பதுக்கி வைத்தேன்,
அடிக்கடி அதனை திறந்து பார்த்து
ஆறுதல் அடைவது போல் நடித்தேன்!
உணவு இடைவெளியின் போதும் ,
உள்ளங்கை அலைபேசியில்,அவளை
கனவாய் பார்த்து கலங்கினேன்!

களைத்து திரும்பிய இந்த உடம்பு,
கதவோராம் ஏன் காத்திருக்கு?
கழுத்தை பிடித்து கொண்டு,
அப்பா அப்பாவென்று அவள்
அலறும் சத்தம் கேட்பதற்க்கு!
இரண்டு மணி நேர இந்த பயணம்
இரவோடு இன்று முடிந்தாலும்,
அப்பா மகள் என்ற உறவோடு,
ஆயுள் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும்
செல்லரித்து போனாலும் என் நா,
செல்லமகளுக்காக செந்தமிழை
பாடிக்கொண்டிருக்கும்!

-Siva

No comments:

Post a Comment